×

4 ஆண்டுகளுக்குப் பிறகு பாக். திரும்பினார் நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பினார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவருமான 73 வயதாகும் நவாஸ் ஷெரீப், கடந்த 2016ல் பனாமா பேப்பர்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். அதைத் தொடர்ந்து 2017ல் பதவி விலகிய அவருக்கு பல்வேறு ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு, பொதுப்பதவி வகிக்க நவாசுக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வாழ்நாள் தடை விதித்தது.

சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ், மருத்துவ சிகிச்சைக்காக 2019ல் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு சென்ற பின்னர் அங்கிருந்து நாடு திரும்பவில்லை. இதற்கிடையே, இம்ரான் கான் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, நவாசின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்காக அவர் நாடாளுமன்றத்தை கலைத்தார். வரும் ஜனவரியில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் 4 ஆண்டுக்குப் பிறகு நவாஸ் ஷெரீப் நேற்று நாடு திரும்பினார். லண்டனில் இருந்து துபாய் வந்த அவர் அங்கிருந்து நேற்று பிற்பகல் தனி விமானம் மூலம் இஸ்லாமாபாத் வந்தடைந்தார். அவருடன் கட்சியை சேர்ந்த 150 ஆதரவாளர்கள் விமானத்தில் வந்தனர். பின்னர் சிறிது நேரம் இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்த நவாஸ், லாகூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

The post 4 ஆண்டுகளுக்குப் பிறகு பாக். திரும்பினார் நவாஸ் ஷெரீப் appeared first on Dinakaran.

Tags : Bagh ,Nawaz Sherif ,Islamabad ,Former ,Prime Minister of ,Pakistan ,Nawaz Sharif ,UK ,Pak ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா